சஹாபாக்களின் மார்க்க கூற்றும்..

Category: Tamil Articles
Created on Monday, 14 February 2011

சஹாபாக்களின் மார்க்க கூற்றும் வஹியே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிர்கினிய சகோதரர்களே, சஹாபாக்களின் மார்க்க கூற்று வஹியாகுமா? அவர்களை மார்க்க விஷயத்தில் பின்பற்றுவது தவ்ஹீதை விட்டு வெளியேற்றுமா?

என்பன போன்ற சர்ச்சைகள் தமிழகத்தில் பரவளாக காண்ப்படுவதை நம்மால் காண முடிகிறது, எனவே இதுபற்றிய தெளிவை மிகவும் சுறுக்கமான முறையில் உங்களிடம் கேள்வி-பதில் வடிவில் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

கேள்வி 1: அல்லாஹிவின் தூதருக்கு மட்டும் தான் வஹீ வரும், சாஹாபாக்களுக்கு வஹீ வராது, எனவே குர்ஆன் மற்றும் சுன்னாவை தான் பின்பற்ற வேண்டும் சாஹாபாக்களை பின்பற்ற தேவை இல்லை!

பதில்: ஆம், குர்ஆன் சுன்னாவை மட்டும் தான் பின்பற்றவேண்டும், ஆனால் சுன்னா என்பதன் வரைவிளக்கம் என்ன? நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் சொல், செயல் , அங்கிகாரம் ஆகியவைதான் சுன்னா என்பதை நாம் அறிவோம். ஆனால் நபிகள் நாயகம் சொன்னதாக, செய்ததாக, அங்கிகரித்தாக நேரடியாகவும் வரலாம், மறைமுகமாகவும் வரலாம். இது பற்றி சற்று விரிவாக பார்போம்.

ஹதீஸின் சங்கிலி தொடர் நூல் ஆசிரியரிடமிருந்து யார் வரை சென்று முடிகிறது என்பதை வைத்து ஹதீஸ்களை மூன்றாக ஹதீஸ் கலை வல்லுனர்கள் பிரிப்பார்கள், கூறப்படும் ஹதீஸ் நபி(ஸல்) அவர்கள் வரை சென்று முடிந்தால் அவை மர்ஃபுவான ஹதீல் எனப்படும், சஹாபிவரை சென்று முடிந்தால் அவை மவ்கூஃபான ஹதீஸ் எனப்படும், தாபியி அல்லது அவர்களுக்கு கீழ் உள்ளவர் வரை சென்று முடிந்தால் அவை மக்தூவான ஹதீஸ் எனப்படும்.

இப்பொழுது நாம் சுன்னா என்று சொல்வது மர்ஃபுவான ஹதீஸை தான்(நபி(ஸ்ல) அவர்களுடன் தொடர்பு படுத்தி அறிவிப்பது). இதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.

மர்ஃபுவான ஹதீஸ்களை இரண்டு வழிகளில் அறிவிக்கலாம், ஒன்று நேரடியாக அறிவிப்பது இதை மர்ஃபு சரிஹ் (مرفوع صريحاً) என்றும், மற்றோண்டு மறைமுகமாக, அதாவது மேலோட்டமாக பார்த்தால் சஹாபியின் கூற்று ஆனால் அதை நபி(ஸல்) அவர்கள் மூலம் தான் அறிந்து கொள்ள முடியும் என்பதால் அவையும் மர்ஃபு என்ற தரத்திற்கு உயரும் இவற்றை மர்ஃபு ஹுக்மன்(مرفوع حكماً) என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் அழைப்பார்கள்.

நேரடியாக அறிவித்தல்(مرفوع صريحاً)

நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக, செய்ததாக அல்லது அங்கிகரித்தாக நேரடியாக அறிவிப்பது.

உதாரணம்:

عمر بن الخطاب يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات

உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், அனைத்து செயல்களும் எணணங்களை போருத்தே!(புஹாரி)

இதில் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக, அதாவது ரசூல்(ஸல்) யக்கூல்(கூறினார்கள்) என்ற வார்த்தையை பயன் படுத்தி உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

இதுபோல் நபி(ஸ்ல்) அவர்களின் பெயரை பயன்படுத்தி அவர்கள் சொன்னதாக, செய்ததாக அங்கிகரித்தாக சஹாபி அறிவிப்பது நேரடியாக அறிவிப்பது ஆகும்.

மறைமுகமாக அறிவித்தில்

நபி(ஸல்) அவர்களுடன் தொடர்பு படுத்தி மறைமுகமாக நான்கு வழிகளில் அறிவிக்கலாம்.

1. சஹாபியின் கூற்று: எந்த விஷயத்தில் மூலையை கொண்டு ஆராய்ந்து கூறமுடியாதோ, அத்தகையை விஷயத்தை சஹாபி கூறினால் அதை அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலமாகவே அறிந்து கொள்ள முடியும் என்பதால் அது மவ்கூஃப் என்ற தரத்தில் இருந்து, மர்ஃபு என்ற தரத்திற்கு உயரும்,அதாவது சஹாபியின் சொந்த கூற்று என்ற தரத்தில் இருந்து நபி(ஸல்) அவர்களின் கூற்று என்ற தரத்திற்கு உயரும்.

உதாரணத்திற்கு மறுமை நாள் தொடர்பான விஷயங்கள், முன் சென்ற நபிமார்கள் தொடர்பான விஷயங்கள், வணக்கவழிப்பாடுகள் தொடர்பான விஷயங்கள், சஹாபாக்கள் இட்டுக்கட்டமாட்டார்கள் என்பதால் இது நபி(ஸல்) அவர்கள் மூலம் தான் அறிந்து கொள்ள முடியும் என்பதால் இது வஹீதான் என்ற முடிவுக்கும் நாம் வரவேண்டும் என்பது ஹதீஸ் கலை வல்லுனர்களின் கூற்றாகும். ஆனால் வரலாற்று தொடர்களை இஸ்ராயிலியாத் கதைகள் மூலம் அறிவிப்பவர் என்று அறியபடாதவராக இருக்க வேண்டும், அவ்வாறு அறிவிப்பவராக இருந்தால் அவை மவ்கூஃபான ஹதீஸ்(சஹாபாக்களின் சொந்த கூற்று) ஆகும்.

2. சஹாபியின் செயல்: வணக்க வழிப்பாடுகளை நபி(ஸல்) அவர்கள் மூலமாகவே சஹாபாக்கள் அறியமுடியும் என்பதால், வணக்க வழிபாடுகளில் அவர்கள் செய்தது, நபிகள் நாயகம் செய்தது ஆகும்.

உதாரணம்

عن ابن عمر أنه كان « يرفع يديه في كل تكبيرة على الجنازة ،

இப்னு உமர்(ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகையின் ஒவ்வொரு தக்பீரின் போதும் கையை உயர்த்துபவராக இருந்தார்(புஹாரி இமாமின் ரஃப்உ யதைன் என்ற நூலில் இது பதியப்பட்டுள்ளது)

இதை இப்னு உமர்(ரழி) அவர்கள் சுயமாக சிந்தித்து செய்திருக்க முடியாது என்பதால், நபிகள் நாயகத்தின் வழிகாட்டலின் மூலமே செய்திருக்கமுடியும் என்பதால் இவையும் மர்ஃபு ஹதீஸாகவே கருதப்படும். ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், இந்த ஒரு ஹதீஸை மட்டும் வைத்து யாரும் சட்டம் எடுப்பதில்லை

இது சம்மந்தமாக வரக்கூடிய அனைத்து அறிவிப்புகளையும் ஆய்வு செய்த பிறகு தீர்ப்பளிக்க வேண்டும்.

3. ஒரு செயலை பற்றி இது சுன்னத்தாகும் என்று சஹாபாக்கள் கூறுவது, அதன் மூலம் அவர்கள் நாடுவது, நபி(ஸல்) அவர்களின் செயல் முறை.

உதாரணம்

صلى بنا ابن عباس على جنازة فجهر بالحمد لله ثم قال : إنما جهرت لتعلموا أنها سنة

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் எங்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள், அப்போழுது சூரத்துல் ஃபாத்திஹாவை சப்தமாக ஒதினார்கள், பிறகு கூறினார்கள், இது சுன்னா என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவே அவ்வாறு செய்தேன்.(ஸுனன் பைஹகி)

எனவே சுன்னா என்ற சொல்லின் மூலம் அவர்கள் நாடுவது, நபிகள் நாயகத்தின் செயல் முறை என்பதால், இதுவும் மர்ஃபு என்ற தரத்திற்கு உயரும்.

4. நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தொம், நாங்கள் செய்பவர்களாக இருந்தோம் போன்ற வாக்கியங்களை பயன் படுத்தி அறிவித்தால் அது நபிகள் நாயகத்தின் காலத்தையே குறிக்கும் என்பதால் அது மர்ஃபு என்ற தரத்திற்கு உயரும்.

உதாரணம்

كان الناس يؤمرون أن يضع الرجل اليمنى على ذراعه اليسرى في الصلاة

தொழுகையின் போது வலது குடங்கையை, இடது குடங்கை மீது வைக்குமாறு மக்கள் கட்டளை இடப்பட்டிருந்தனர் என்று சுஹைல் இப்னு ஸயீத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (புஹாரி)

எனவே மேற்கூறப்பட்ட நான்கு வழிகள் தவிர மற்ற வழிகளில் சஹாபாக்கள் அறிவித்தால் அது அவர்களின் சொந்த கூற்றாகும், அவையே மவ்கூஃபான ஹதீஸ் ஆகும் உதாரணத்திற்கு மார்க்க அறிவுறை மற்றும் உலக விஷயங்கள்.

உதாரணம்

قال علي : " حدثوا الناس بما يعرفون ، أتريدون أن يكذب الله ورسوله

அலீ(ரலி) அவர்கள் கூறினார்கள் மக்களுக்கு அவர்கள் அறிவு ஏற்று கொள்வதையை கூறுங்கள், அல்லாஹ்வையும், ரசூலையும் அவர்கள் பொய்படுத்துவதை நீங்கள் விரும்புகிறிர்களா? (புஹாரி)

மேலே உள்ள ஹதீஸ் வணக்கவழிபாடுகள் தொடர்புடையது அல்ல, மறைவானதும் அல்ல, மூலைக்கு எட்டாததும் இல்லை, இது ஒரு அறிவுரை, இத்தகையான ஹதீஸ்கள் தான் மவ்கூஃப் எனப்படும்.

எனவே இதன் சுருக்கமாக நாம் சொல்வது என்ன வென்றால் வணக்க வழிப்பாடுகள் விஷயத்தில் நபிதோழர்கள் செய்தது வஹீயே, ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள் தான் அவர்களின் நேரடி ஆசிரியர், அவர்கள் மூலமாகவே தவிர இதை அவர்கள் கூறமுடியாது.

நாம் மேலே கூறிய ஹதீஸ் கலைபற்றிய விபரம் நம்முடைய சொந்த கூற்று இல்லை,அவை கீழ் கண்ட ஹதீஸ் கலை தொடர்பான இரண்டு நூல்களிலிருந்து எடுக்கப்பட்டது.

1.முஸ்தலஹல் ஹதீஸ்(مصطلح الحديث) - ஷெய்க் ஸாலிஹ் அல் உஸைமீன் (http://www.ibnothaimeen.com/all/books/article_16873.shtml)

2.மன்ஹஜ் அல் ஹதீஸ் ஃபி தஸ்ஹீல் உலூமுல் ஹதீஸ்(المنهج الاحديث في تسهيل علوم القرآن) -டாக்டர் அலி நாயிஃப் பக்காயி

வணக்க வழிபாடுகளில் நபி தோழர்கள் செய்தது வஹீ என்பதே முஹத்தீஸீன்களின் கருத்தாகும்.

கேள்வி 2. அப்படியானால் சில நபிதோழர்களின் செயல்கள் சுன்னாவுடன் முரண்படுகிறதே?

பதில் : நபிதோழர்களின் செயல்கள் மட்டும் சுன்னாவுடன் முரண்படுவதில்லை, ஸஹீஹான ஹதீஸ், மற்றோரு ஸஹீஹான ஹதீஸுடன் முரண்படும், எனவே நபி(ஸல்) அவர்கள் தனக்கு தானே முரண்பட்டுகொண்டார்கள் என்று யாராவது சொல்வோமா? அப்படி அல்ல யாரும் ஒரு நபிதோழரின் செயலை வைத்தோ அல்லது ஒரு ஹதீஸை வைதோ தீர்ப்பளிப்பது அல்ல, இது சம்மந்தமாக வந்த அனைத்து அறிவிப்புகளையும் ஒன்று இனைத்து பிறகே தீர்ப்பளிக்க வேண்டும், ஏனென்றால் ஹதீஸ் நூல்கள் வெறும் 6 அல்ல, கிட்டதட்ட 1400 ஹதீஸ் நூல்கள் உள்ளன, எனவே எது முதலில் அறிவித்தது, எது பிறகு அறிவித்தது, எது பலமானது எது பலமற்றது போன்ற இன்னும் பல விடயங்களை ஆய்வு செய்த பிறகே தீர்ப்பளிக்க வேண்டும், இதை எல்லோராலும் செய்ய முடியாது, மிகவும் படித்த இஸ்லாமிய அறிஞர்கள் மட்டும் தான் இந்த ஆய்வை செய்ய முடியும், மற்றவர்கள் ஆதாரம் அறிந்து அதை பின்பற்ற வேண்டும்.

மேலும் அவர்கள் சுன்னாவுடன் முரண்பட்டார்கள் என்று கூறுபவர்களின் உதாரணங்களில் பெரும்பாலனவை, அந்த நபி தோழர்களுக்கு சட்டம் மாற்றப்பட்டது தெரியாததால் நடந்த தவறாகும், ஆயினும் அவர்கள் பின்பற்றியது வஹீயேதான், ஆனால் அந்த வஹீ மாற்றப்பட்டது அவர்களுக்கு தெரியவில்லை, எனவே அவர்கள் வஹீயேதான் பின்பற்றுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

எனவே நாம் இங்கே சொல்ல வருவது, நாம் எந்த ஒரு ஆய்வு செய்த போதிலும் அவற்றில் சஹாபாக்களின் கூற்றையும் எடுத்தே ஆய்வு செய் வேண்டும். இல்லையெனில் நாம் முழுமையாக சுன்னாவை பின் பற்ற முடியாது.

கேள்வி 3: நபிதோழர்கள் தங்களுக்கு மத்தியில் பல ஃபிக்ஹ் விடயங்களில் முரண்பட்டார்களே?

பதில்: அவர்கள் தங்களுக்கு மத்தியில் முரண்படவில்லை, பல சரியான கருத்துகளில் ஒன்றை தேர்வு செய்தார்கள் என்பதே சரியானது, ஒன்றும் ஒன்றும் இரண்டு மட்டும் தான் என்று சொல்வதற்கு மார்க்கம் ஒன்றும் கணிதவியல் இல்லை. இது ஒரு வாழ்கை திட்டம் இதில் எதிரும் புதிருமான விடயங்கள் சரியாக இருக்கும், அல்லாஹ்வின் இந்த மார்க்கம் பல கருத்துகள் தரக்கூடிய அமைப்பிலேயே அமைந்துள்ளது இது அல்லாஹ்வின் சுன்னத், இதில் தான் இந்த மார்க்கதின் ரூஹ்(உயிர்) உள்ளது.

கேள்வி 4: நபிதோழர்களின் ஃப்த்வாக்கள் மார்க்கம் ஆகுமா?

பதில்: நாம் முன்னர் சொன்னது போல் அவர்கள் வணக்க வழிபாடுகள் விஷயமாக ஃப்த்வாக்கள் கொடுத்தால், அதை நபி மூலமே அறிவிக்க முடியும் என்பதால், அது சுன்னாவாக கருதப்படும் ஆனால் எப்படி ஒரே ஒரு ஹதீஸை மட்டும் ஆதாரமாக வைத்து தீர்ப்பு சொல்ல கூடாதோ அது போல ஒரே ஒரு சஹாபியின் கூற்றை மட்டும் ஆதாரமாக ஆக்க கூடாது அது சம்மந்தமாக வரக்கூடிய சஹாபாக்களின் அனைத்து ஃப்த்வாக்களையும் திரட்டி பிறகு முடிவு செய்ய வேண்டும்.

மேலும் நபிதோழர்கள் நபி(ஸல்) அவர்களின் நேரடி மாணவர்கள் என்பதால் மற்றவர்களின் ஃப்தவாக்களை விட நபிதோழர்களின் ஃப்த்வாக்களுக்கு நாம் முன்னுரிமை வழங்குவோம்.

கேள்வி 5: நபிதோழர்களை பின்பற்றுவது தவ்ஹீதை விட்டு வெளியேற்றுமா?

நபிதோழர்களை பின்பற்றினால் தான் சுன்னாவை முறையாக பின்பற்ற முடியும் என்பதால், அவர்களை பின்பற்றுவது நம்மை தவ்ஹீதில் இன்னும் உறுதியாக இருக்க உதவும்.

நபிதோழர்களை பின்பற்றுவதுதான் அஹ்லே சுன்னத் வல் ஜமாத் உடைய கொள்கையாகும், மேலும் அஹ்லே சுன்னத் வல் ஜமாத்தை சேர்ந்த அனைத்து உலாமக்களின் ஏகோபித்த முடிவு குர்ஆன் சுன்னாவை முதல் மூன்று தலைமுறையினர்கள் விளங்கியது போல் விளங்க வேண்டும், எனவே அவர்கள் அனைவரும் தவ்ஹீதை விட்டு விளகிவிட்டார்கள் என்று சொன்னால், யார் தான் இந்த 1400 வருடங்களில் முஸ்லிமாக வாழ்ந்தது?

மேலும் அஹ்லே சுன்னத் வல் ஜமாத் என்பதன் பொருள், நபி(ஸல்) அவர்களையும், நபிதோழர்களையும் பின்பற்றும் கூட்டம் என்பதாகும்.

இது தவிர நபிதோழர்களை பின்பற்றுவது தொடர்பாக பல குர்ஆன் ஆய்த்துகளும், நபிமொழிகளும் வந்துள்ளன அவற்றை பல சகோதர்கள் மூலம் பல தடவை சுட்டி காட்டப்பட்டுள்ளதால் அதை நான் இங்கு தவிர்த்துள்ளேன்.

அன்புடன்

முஹம்மத் இப்ராஹீம்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

  • Admin1

    Posted at 2011-05-26 13:48:34

    [quote name="Abdullah firdousi"]Assalaamu alaikum wa Rahmathullahi wa Barakatho[/quote]
    Wa Alikkum Salaam wa Rahmathullahi wa Barakathuh

    Reply to comment

  • Abdullah firdousi

    Posted at 2011-05-17 23:35:39

    Assalaamu alaikum wa Rahmathullahi wa Barakatho

    Reply to comment

Post your comments...

Copyright 2011. By Hostgator | IDCUK.ORG